கொனோரியா அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை (Gonorrhoea symptoms, causes and Treatment)



கொனோரியா என்பது பாலியல் வழியில் பரவக்கூடிய நோய்த்தொற்று (STI) ஆகும். இது நெய்சீரியா கொனோரியா எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
காரணங்கள் (Causes)
இந்த நோய்த்தொற்று உள்ளவருடன் ஒருவர் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும்போது இது பரவுகிறது. கொனோரியா பாதிப்புள்ள ஒருவருடன் மற்றொருவர் இயல்பான உடலுறவு, குதவழி உடலுறவு அல்லது வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடும்போது அது பரவக்கூடும். ஆணுறுப்பிலிருந்து வெளியேறும் திரவங்கள் மற்றும் கசியும் பொருள்களிலும் பெண்ணுறுப்பின் திரவங்களிலும் இந்த பாக்டீரியா இருக்கும்.
ஒருவரது வைப்ரேட்டர்கள் அல்லது பிற செக்ஸ் டாய்சை பிறர் கழுவாமலோ புதிய ஆணுறை கொண்டு மூடாமலோ பயன்படுத்துவதன் மூலமும் இது பரவக்கூடும்.
முத்தமிடுவது, கட்டி அணைப்பது, உடைகள், டவல், பாத்திரங்கள், கழிவறைகள் அல்லது நீச்சல் குளங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் இந்த நோய் பரவுவதில்லை.
இந்த பாக்டீரியா கருப்பை வாய்ப்பகுதி (செர்விக்ஸ்), சிறுநீர்ப்பாதை, மலக்குடல் போன்ற பகுதிகளைப் பாதிக்கலாம். அரிதாக தொண்டை அல்லது கண்களையும் பாதிக்கலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த நோய்த்தொற்று இருந்தால் அது குழந்தை பிறக்கும்போது குழந்தைக்கும் பரவலாம்.
அறிகுறிகள் (Symptoms)
இந்த நோய்த்தொற்று பெற்ற ஆண்களில் 10% பேருக்கும் பெண்களில் 50% பேருக்கும் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை.
ஆண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் நோய்த்தொற்று (Genital infection in Men)
  • ஆணுறுப்பின் முனையிலிருந்து வழக்கத்திற்கு மாறாக திரவங்கள் அல்லது பிற பொருள்கள் வெளிவருதல் (வெள்ளை, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கலாம்)
  • சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல்
  • மொட்டு முனைத்தோலில் அழற்சி (வீக்கம்)
  • விந்தகங்களில் வலி அல்லது அசௌகரியம் (அரிதாகத் தோன்றும்)
பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் நோய்த்தொற்று (Genital Infection in Women)
  • பெண்ணுறுப்பில் இருந்து வழக்கத்திற்கு மாறாக திரவங்கள் அல்லது பிற பொருள்கள் வெளியேறுதல் (நீர் போன்று இருக்கலாம், பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கலாம்)
  • சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல்
  • அடிவயிற்றில் அசௌகரியம் அல்லது வலி (இது அரிதான அறிகுறி)
  • அடுத்தடுத்த மாதவிடாய்க்கு இடையே இரத்தப்போக்கு ஏற்படுவது, அதிக இரத்தப்போக்குடன் மாதவிடாய், உடலுறவுக்குப் பிறகு இரத்தம் கசிதல்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் கண் அல்லது மலக்குடலில் நோய்த்தொற்று (Eye or Rectal infection in men and women)
கண் - கண்நோய்
மலக்குடல் - அசௌகரியம், வலி, வீக்கம்
குழந்தைகள் (Babies)
பிறக்கும் குழந்தைக்கு தாயிடமிருந்து கொனோரியா நோய்த்தொற்று பரவினால், முதல் இரண்டு வாரங்களில் குழந்தைக்கு கண் சம்பந்தப்பட்ட அறிகுறிகள் காணப்படலாம். கண்கள் சிவந்திருத்தல், வீக்கம், கெட்டியான பொருள்கள் கண்களிலிருந்து வெளியேறுதல் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும்.
நோய் கண்டறிதல் (Diagnosis)
உங்களுக்கு கொனோரியா அல்லது வேறு ஏதேனும் பாலியல் நோய்த்தொற்று இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சையளித்தால், நோய்த்தொற்று விந்தகங்களுக்குப் பரவுவது அல்லது பெண்களின் இடுப்புப்பகுதி அழற்சி நோய் போன்றவை ஏற்படும் அபாயங்களைக் குறைக்கலாம்.
உடலுறவில் ஈடுபட்ட ஓரிரு நாட்களுக்குள் பரிசோதனை செய்துகொள்ளலாம். உங்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்தாலும் இன்னும் ஒரு வாரம் காத்திருக்குமாறு மருத்துவர் கூறலாம்.
ஆண்கள் (Men)
ஆணுறுப்பின் முனையில் கசியும் பொருள்களை ஸ்வாப் எனப்படும் சிறு குச்சிகளில் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்படும். சிறுநீர் பரிசோதனையும் செய்யப்படலாம்.
பெண்கள் (Women)
யோனி அல்லது கருப்பை வாய்ப்பகுதியிலிருந்து ஸ்வாப் குச்சிகள் மூலம் மேற்பரப்பில் உள்ளவை சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படலாம். சில சமயம், சிறுநீர்ப்பாதையின் மேற்பரப்பிலும் ஸ்வாப் உரசல் சோதனை செய்யப்படலாம்.
மலக்குடல் மற்றும் கண்கள் (Rectum and Eyes)
மலக்குடல் பகுதியில் ஸ்வாப் உரசல் சோதனை செய்யப்படலாம் அல்லது கண்களில் இருந்து வெளியேறும் பொருள்கள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்படலாம்.
சிகிச்சை (Treatment)
பெரும்பாலும், இதற்கான சிகிச்சையில் ஒரே ஊசி போட்டு குணப்படுத்தப்படும் அல்லது ஒரே ஒரு மாத்திரை மூலம் சரிசெயப்படும். சில நாடுகளில், ஒரு டோஸ் ஆன்டிபயாட்டிக் மருந்து மூலமும் இந்நோய் குணப்படுத்தப்படுகிறது.
உங்கள் இணையரும் இந்த நோய்த்தொற்று உள்ளதா என்று சோதனை செய்துகொண்டு சிகிச்சை பெற வேண்டியது முக்கியம்.
பொதுவாக, ஒரு சில நாட்களில் கொநோரியாவின் அறிகுறிகள் தணியத்தொடங்கும். கீழ் இடுப்புப் பகுதி அல்லது விந்தகங்களில் இருக்கும் வலி குறைய இரண்டு வாரங்களாகலாம். மாதவிடாய் நாட்களுக்கு இடையே ஏற்படும் இரத்தப்போக்கு நிற்க, அடுத்த மாதவிடாய் சுழற்சி வரை காத்திருக்க வேண்டியிருக்கலாம்.
சிகிச்சை முடிந்து ஓரிரு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவரிடம் வந்து, மீண்டும் பரிசோதனைகள் செய்துகொண்டு, நோய்த்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இது முழுமையான சிகிச்சையின் ஒரு பகுதியாகும்.
சிகிச்சை முடிந்து, நோய்த்தொற்று முற்றிலுமாக இல்லாமல் போனது என்று மருத்துவர் சான்றளிக்கும் வரை, உடலுறவில் ஈடுபடாமல் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படலாம்.
தடுத்தல் (Prevention)
இயல்பான உடலுறவில் ஈடுபடும்போது ஆணுறைகளைப் பயன்படுத்தவும்.
வாய்வழிப் புணர்ச்சி அல்லது குதவழி உடலுறவில் ஈடுபடும்போது, ஆணுறுப்பிற்கு ஆணுறை பயன்படுத்தவும். லேட்டக்ஸ் அல்லது பாலியூரத்தின் (மென்மையான பிளாஸ்டிக்) ஆணுறைகளைக் கொண்டு பெண்ணின் உறுப்புகளையோ ஆண் அல்லது பெண்ணின் ஆசனவாயையோ மூடிக்கொண்டு உடலுறவில் ஈடுபடலாம்.
பெண்களுடன் உடலுறவில் ஈடுபடும் பெண்கள், பெண்ணுறுப்புகள் உரசும்படி செய்ய நேரும் எனில், லேட்டக்ஸ் அல்லது பாலியூரத்தின் (மென்மையான பிளாஸ்டிக்) ஸ்கொயர் பயன்படுத்தி உறுப்புகளை மூடிக்கொண்டு செய்யலாம்.
செக்ஸ் டாய்ஸ் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும். அப்படி பிறருடன் பகிர்ந்து கொண்டால், மீண்டும் பயன்படுத்தும் முன்பு அவற்றை நன்கு கழுவவும்.
சிக்கல்கள் (Complications)
ஆண்கள் (Men)
விந்தகங்கள் (ஆர்ச்சைட்டிஸ்) மற்றும் புரோஸ்டேட் (புரோஸ்டேட்டைட்டிஸ்) சுரப்பியில் வலியுடன் கூடிய நோய்த்தொற்று உண்டாகலாம். சிலருக்கு அதனால் குழந்தையின்மைப் பிரச்சனை ஏற்படலாம்.
பெண்கள் (Women)
நோய்த்தொற்று இனப்பெருக்க உறுப்புகளைப் பாதித்தால், கீழ் இடுப்புப் பகுதி அழற்சி நோயை ஏற்படுத்தலாம், இதனால் இடுப்பு வலி, கருக்குழாய் கருவளர்ச்சி, குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.
கர்ப்பத்தின்போது, கொனோரியா நோய்த்தொற்று ஏற்பட்டால் கருச்சிதைவு, குறைப்பிரசவம், பிறக்கும் குழந்தைக்கு கண்நோய் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.
அரிதாக, கொனோரியாவுக்கு சிகிச்சையளிக்காமல் விடும்போது அது இரத்த ஓட்டத்தில் கலந்து, உடலின் பிற பாகங்களில் உயிருக்கே அச்சுறுத்தலாகும் நோய்த்தொற்றுகளை உண்டாக்கலாம் இதனை செப்டிகேமியா என்பார்கள்.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
கொனோரியா உள்ளது என்று உறுதிசெய்யப்பட்டதும், அதற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது மிக முக்கியம். அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால் குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம். உங்களிடமிருந்து பிறருக்கும் நோய்த்தொற்று பரவலாம்

Comments