மார்பக கால்சியப் படிவுகள்: காரணங்கள் மற்றும் சிகிச்சை (Breast Calcifications: Causes and Treatment)



மார்பகத் திசுக்களில் கால்சியம் படிவுகள் சேரும் பிரச்சனையே மார்பக கால்சியம் படிவுகள் எனப்படும். இந்தப் பிரச்சனை இருப்பது ஒருவருக்கு வெளிப்படையாகத் தெரியாது, மம்மோகிராஃபி எனும் பரிசோதனை செய்யும்போதே இந்தப் பிரச்சனை தெரியவரும். எக்ஸ்ரே சோதனைகள் மூலம் மார்பகத்தின் உட்புறக் கட்டமைப்பு படமெடுக்கப்பட்டு, கட்டமைப்பில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என ஆய்வு செய்யப்படும்.
மம்மோகிராம் சோதனையில், இந்த கால்சியம் படிவுகள் சிறு சிறு வெள்ளைத் திட்டுகள் அல்லது புள்ளிகள் போலக் காணப்படும், இவை மிகவும் சிறியதாக இருக்கும் என்பதால் பொதுவாக நீங்கள் அவை இருப்பதையே உணர முடியாது. பெரும்பாலும் இவை மாதவிடாய் நின்ற, வயதான பெண்களுக்கே உண்டாகிறது. மம்மோகிராம் சோதனை செய்யப்பட்ட 50 வயதைத் தாண்டிய பெண்களில் பாதிபேருக்கு மார்பக கால்சியப் படிவுகள் உள்ளது.
மார்பக கால்சியப் படிவுகள் உண்டாகக் காரணங்கள் (What are the causes for breast calcification?)
மார்பக கால்சியப் படிவுகள் இரண்டு வகையானவை:
1. மேக்ரோகால்சிஃபிகேஷன்
பெரிய மார்பக கால்சியப் படிவுகள் (மேக்ரோகால்சிஃபிகேஷன்): இவை மார்பகங்களில் உண்டாகும் பெரிய படிவுகளாகும். 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இவை ஏற்படுவது பொதுவானது. இவை பெரும்பாலும் புற்றுநோய் சம்பந்தமில்லாத மாற்றங்களாகவே இருக்கும், அவற்றி சில:
  • மார்பகங்களின் தமனிகளில் ஏற்படும் வயது சம்பந்தப்பட்ட மாற்றங்கள்
  • முலையழற்சி - மார்பகத் திசுக்களில் ஏற்படும் அழற்சி
  • மார்பகத் திசுக்களில் அடிபடுதல்:
    • விபத்துகளில் காயம் படுதல்
    • முன்னதாக மார்பகப் புற்றுநோய் சிகிச்சைகள் (அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு சிகிச்சை போன்றவை)
  • மார்பகத்தில் பின்வருபவை போன்ற தீங்கற்ற திரட்சிகள்:
    • நீர்க்கட்டிகள்
    • நார்த்திசுக்கட்டிகள்
  • இரத்தக் குழாய்கள் அல்லது மார்பக சருமத்தில் உள்ள கால்சியம் படிவுகள்
பெரிய மார்பக கால்சியப் படிவுகள் மம்மோகிராம் படத்தில் ஒரே மாதிரி தோற்றம் கொண்டிருக்கும், இவை பொதுவாக புற்றுநோய் அல்லாத பிரச்சனைகளால் ஏற்படுகின்றன. இவற்றுக்கு பெரும்பாலும் திசுப்பரிசோதனை தேவையில்லை.
2. சிறிய மார்பக கால்சியப் படிவுகள்
இவை மார்பக கால்சியப் படிவுகள். மார்பகத்தில் மிகச்சிறிய கால்சியப் புள்ளிகளாகக் காணப்படும். மார்பக செல்களில் செயல்பாடு அதிகரிப்பதால், செல்களுக்குள் அதிக கால்சியம் எடுத்துக்கொள்ளப்படுவதால் இவை உண்டாகலாம்.
இவை மார்பகத்தில் தனித்தனி இடங்களில் காணப்படலாம் அல்லது திரட்சியாகவும் காணப்படலாம். இவை பொதுவாக புற்றுநோயால் ஏற்படுவதில்லை, ஆனால் சில சமயம், இவை புற்றுநோய் உண்டாவதற்கு முந்தைய நிலையின் அறிகுறியாக இருக்கலாம் அல்லது ஒரே பகுதியில் அதிக கால்சியம் புள்ளிகள் திரட்சியாகக் காணப்பட்டால் இவை மார்பகப் புற்றுநோயின் ஆரம்பக்கட்டமாக இருக்கலாம். இவை இருப்பதாகக் கண்டறியப்பட்டால், மேலும் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கலாம்.
அறிகுறிகள் (Symptoms)
இவை எந்த அறிகுறிகளையும் கொண்டிருக்காது. இவை மிகச் சிறியதாக இருப்பதால், வழக்கமான மார்பகப் பரிசோதனைகளின் போது இவற்றைக் கண்டறிய முடியாது. மம்மோகிராம் சோதனை மூலமே இவற்றைக் கண்டறிய முடியும்.
மம்மோகிராம் சோதனையில் மார்பக கால்சியப் பதிவுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டால் அடுத்து என்ன செய்வார்கள்? (What happens when calcifications are found in your mammogram?)
மம்மோகிராம் சோதனையில் மார்பக கால்சியப் படிவுகள் இருப்பதாகத் தெரிந்தால், எக்ஸ்ரே, ஸ்கேன் நிபுணரான ஒரு மருத்துவர் (ரேடியாலஜிஸ்ட்) கால்சியப் படிவுகளின் வடிவம், அளவு, அமைப்பு ஆகியவற்றை மதிப்பிடுவார். அந்த மதிப்பீட்டின்படி, மேலும் சோதனைகள் செய்ய வேண்டுமா என்று உங்களுக்கு விளக்கப்படும்.
பொதுவாக பெரிய மார்பக கால்சியப் படிவுகள் மட்டும் இருப்பதாகத் தெரிந்தால், மேலும் சோதனைகள் அல்லது சிகிச்சை எதுவும் தேவையில்லை.
மம்மோகிராம் சோதனையில் சிறிய மார்பக கால்சியப் படிவுகள் இருப்பதாகத் தெரிந்தால், பாதிக்கப்பட்ட பகுதியில் இன்னும் நெருக்கமாகப் படமெடுக்கும் மம்மோகிராஃபி சோதனை செய்துகொள்ளுமாறு மருத்துவர் பரிந்துரைப்பார். அப்படிச் செய்யப்படும் அடுத்த மம்மோகிராஃபி சோதனையில் அந்த மாற்றங்கள் தீங்கற்றவை எனத் தெரியவந்தால், மேலும் பரிசோதனைகள் எதுவும் செய்ய வேண்டியிருக்காது.
சோதனையில் முடிவுகள் துல்லியமாகத் தெரியாவிட்டால், மீண்டும் திசுப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு மருத்துவர் உங்களைக் கேட்டுக்கொள்வார். அதில் சிறிய மாதிரித் திசு எடுக்கப்பட்டு நுண்ணோக்கியில் வைத்து ஆய்வு செய்யப்படும். அதில் கிடைக்கும் தகவல்கள், பிரச்சனையை இன்னும் துல்லியமாகக் கண்டறிய மருத்துவருக்கு உதவும். சில சமயம், மீண்டும் ஆறு மாதங்களுக்குப் பிறகு மம்மோகிராஃபி சோதனை செய்துகொள்ளுமாறு மருத்துவர் உங்களைக் கேட்டுக்கொள்ளலாம்.
சிறிய மார்பக கால்சியப் படிவுகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் திசுப்பரிசோதனை செய்த பிறகு என்ன நடக்கும்? (What will happen after I undergo biopsy for suspicious microcalcifications?)
சிறிய மார்பக கால்சியப் படிவுகள் சோதனை செய்யப்படும்போது, பெரும்பாலும் அவை தீங்கற்றவையாகவே இருக்கும். அதுபோன்ற சமயங்களில் உங்களுக்கு சிகிச்சை எதுவும் தேவைப்படாது.
நுண்ணோக்கியில் ஆய்வு செய்ததில் புற்றுநோய் செல்கள் இருப்பதாகத் தெரிந்தால், பெரும்பாலும் அவை தகடல் கார்சிநோமா இன் சிட்டு (DCIS) அல்லது ஆரம்பகட்ட மார்பகப் புற்றுநோயாக இருக்கவே வாய்ப்புள்ளது. கதிர்வீச்சு சிகிச்சை அல்லது கீமோதெரப்பியின் மூலம் இவற்றுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும்.

Comments